நாமகிரிபேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 2½ வயது பெண் குழந்தை பலி


நாமகிரிபேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 2½ வயது பெண் குழந்தை பலி
x
தினத்தந்தி 12 Nov 2018 4:45 AM IST (Updated: 12 Nov 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிபேட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 2½ வயது பெண் குழந்தை பலியானது.

ராசிபுரம், 

தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகேயுள்ள சின்னகாக்காவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினிதேவி. இவர்களுக்கு சன்மிதாஷாலினி (வயது 2½) என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென்று சன்மிதாஷாலினிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையொட்டி நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தனர். காய்ச்சல் குணமாகாததால் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அங்கு குழந்தை சன்மிதாஷாலினிக்கு மர்மக்காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை சன்மிதாஷாலினி நேற்று முன்தினம் இரவு இறந்தாள். மர்மக்காய்ச்சலால் குழந்தை சன்மிதாஷாலினி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story