திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலி


திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலி
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 7:44 PM GMT)

திருச்சியில் பன்றிக்காய்ச்சலுக்கு போலீஸ் ஏட்டு பலியானார்.

திருச்சி,

தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவலாக இருந்து வருகிறது. இந்நோய்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய் சிகிச்சைக்கு தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோய் தாக்கிய சிலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல், டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்த செல்லதுரை (வயது46) பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு செல்லதுரை சிகிச்சை பெற்று வருவது குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அவருக்கு ஆறுதல் கூறினர். சிறப்பு சிகிச்சை அளித்து அவரை குணமாக்கும்படி மருத்துவமனை டாக்டர்களிடம் கமிஷனர் அமல்ராஜ் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.30 மணிக்கு ஏட்டு செல்லதுரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சக போலீசார் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். பன்றிக்காய்ச்சலுக்கு ஏட்டு பலியானது சக போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஏட்டு செல்லதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அங்கு குணமாகாததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். ஆனால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. கடந்த 1997-ம் ஆண்டு காவல்துறையில் செல்லதுரை பணிக்கு சேர்ந்தார். திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இறந்த செல்லதுரையின் உடல் அவரது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த தண்ணீர்பள்ளத்திற்கு நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இறந்த செல்லதுரைக்கு சிந்தாமணி என்ற மனைவியும், ரேஷ்வரன், கிருபாகரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் உள்பட 2 பேர் கடந்த 9-ந்தேதி பரிதாபமாக இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story