வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சியில் 2 பேர் கைது


வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சியில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 3:00 AM IST (Updated: 12 Nov 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

வில்லிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரெட்டி தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 1-ந் தேதி நள்ளிரவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான ரோந்து போலீசார், அந்த ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று சோதனை செய்தனர்.

அதில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடைபெற்று இருப்பது தெரிந்தது. கொள்ளையர்கள், கடப்பாரையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து உள்ளனர். ஆனால் பணம் இருந்த பகுதியை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.

முன்னதாக கொள்ளையர்கள், ஏ.டி.எம். மையத்தின் வெளிப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்தும், உள்பகுதியில் உள்ள கேமராவை கீழ் நோக்கி திருப்பியும் வைத்து இருந்தனர்.

இதுபற்றி வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.

அதில் வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஆதிநாயுடு தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 23) மற்றும் வினோத் (27) ஆகியோர்தான் இந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணன், வினோத் இருவரையும் வில்லிவாக்கம் போலீசார் கைது செய்தனர்.

தப்பி ஓட்டம்

அவர்கள், 1-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். பணம் இருக்கும் பகுதியை உடைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு இருந்தபோது, அருகில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி முடிந்து பொதுமக்கள் வரத்தொடங்கியதால், பயந்துபோய் பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் பாதியில் விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.

அப்போது செல்லும் வழியில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வீடுகளின் வெளியே மாட்டி இருந்த ஏ.சி. ‘கம்பரஷரை’ கழற்றி திருடிச்சென்றனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் கள் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story