திருக்கனூர் பகுதியில் வாகனங்களில் பேட்டரி திருடிய எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் கைது
திருக்கனூர் பகுதியில் வாகனங்களின் பேட்டரிகள் திருடிய எலக்ட்ரீசியன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 35 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருக்கனூர்,
திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நிறுத்தப்படும் லாரி, வேன், பஸ் போன்ற வாகனங்களில் அடிக்கடி பேட்டரிகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமராப்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு சொந்தமான லாரிகளில் இருந்து 4 பேட்டரிகள் திருட்டு போனது.
இது குறித்து காட்டேரிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேட்டரி திருடர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தேத்தாம்பாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 பேர் சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்தபோது, சாக்கு மூட்டையில் வாகனங்களின் பேட்டரிகள் இருந்தன.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 36), மண்ணாடிப்பட்டு பெரிய காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் பிடாரிப்பட்டில் கடை வைத்து வாகனங்களுக்கு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.
பிடிபட்ட 2 பேரும் திருக்கனூர், குமராப்பாளையம், தேத்தாம்பாக்கம் சுற்றுப்பகுதியில் இரவு நேரத்தில் தனியாக நிற்கும் வாகனங்களின் பேட்டரிகளை திருடியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 35 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.