கும்கியாக மாற்றவே காட்டுயானைகளை பிடிக்க முயற்சி - வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு


கும்கியாக மாற்றவே காட்டுயானைகளை பிடிக்க முயற்சி - வன ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:00 AM IST (Updated: 12 Nov 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தடாகம் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானை களை பிடித்து கும்கியாக மாற்ற வனத்துறையினர் முயற்சி செய்வதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை,

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை, ஆனைக்கட்டி, பொன்னூத்துமலை ஆகிய வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது மலையடிவார பகுதியான சின்னத்தடாகம், தடாகம், வரப்பாளையம், மாங்கரை, பன்னிமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி வருகின்றன. அந்த யானைகளுக்கு சின்னதம்பி, விநாயகன் என்று பொதுமக்கள் பெயர் சூட்டி உள்ளனர். ஆனாலும் காட்டு யானைகள் அங்குள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் மாங்கரை அருகே காட்டு யானைகளை துரத்த சென்ற வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் காட்டு யானை தாக்கி பரிதாபமாக இறந்தார். அவரை விநாயகன் என்ற யானை தான் தாக்கி யது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் வேட்டை தடுப்பு காவலரை தாக்கியது வேறு யானை என்று பழங்குடியின மக்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சின்னதம்பி, விநாயகன் என்ற காட்டு யானைகளை வனத்துறையினர் பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக பொம்மன், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் முதுமலையில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்டது. அதுபோல் ஜான், சேரன் ஆகிய 2 கும்கி யானைகள் சாடிவயல் முகாமில் இருந்தும் வரவழைக்கப்பட்டது. தற்போது அந்த 4 கும்கியானைகளும் வரப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அந்த காட்டு யானைகளை பிடிப்பதற்காக 4 கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், காட்டு யானைகளை பிடிக்க வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

சின்னதம்பி யானைக்கு 25 வயதும், விநாயகன் யானைக்கு 30 வயதும் இருக்கும். இந்த 2 ஆண் யானைகளின் உருவம் மற்ற யானைகளை விட பெரியதாக இருக்கிறது. அந்த யானைகள் சேர்ந்து வருவது இல்லை. ஆனைக்கட்டி, தடாகம், பொன்னூத்துமலை பகுதியில்தான் கடந்த 5 மாதமாக சுற்றித்திரிகின்றன. இதுவரை யாரையும் தாக்கவில்லை.

வனப்பகுதியை விட்டு வெளியே வரும் அந்த யானையின் உருவத்தை பார்த்ததுமே சிலர் பயந்து விடுகிறார்கள். காட்டு யானைகளின் உருவம் பெரியதாக இருப்பதால் அதை பிடித்து கும்கிகளாக மாற்ற வனத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். அது தவறு ஆகும். பொதுமக்களுக்கு அதிகளவில் தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை மட்டுமே பிடிக்க வேண்டும்.

காட்டு யானைகளை துரத்தவே கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தி உள்ளதாக வனத் துறை யினர் கூறுகிறார்கள். ஆனால் சாடிவயல் முகாமில் மரக்கூண்டு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது காட்டு யானைகளை பிடித்து கும்கிகளாக மாற்றி விடுவார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

ஏற்கனவே மதுக்கரையில் மக்களை தாக்கிய மகாராஜா என்ற ஒரு காட்டு யானையை பிடித்த போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் அந்த யானையை வனத்துறையினர் பிடித்து மரக்கூண்டில் அடைத்த போது இறந்து விட்டது. அதுபோல் தான் இந்த யானைகளையும் பிடிக்கும் போது அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

மேலும் இந்த 2 யானைகளும் யாருக்கும் எவ்வித தொந்தரவு கொடுப்பது இல்லை என்று பழங்குடியின மக்கள் கூறுகிறார்கள். அதோடு விவசாயிகளுக்கும் இந்த யானைகளை பிடிப்பதில் உடன்பாடு இல்லை. எனவே இந்த யானைகளை பிடிக்கும் திட்டத்தை வனத்துறையினர் கைவிட வேண்டும். அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டும். காட்டு யானைகளை பிடிக்க முயற்சி செய்தால் கண்டிப்பாக வனத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story