புனே மாநகராட்சி பகுதியில் சாலையில் எச்சில் துப்பினால் நூதன தண்டனை
சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனை விதித்து உள்ளது.
புனே,
சாலையில் எச்சில் துப்பினால் அபராதம் செலுத்துவதுடன், அவரே தனது எச்சிலை சுத்தம் செய்யவேண்டும் என புனே மாநகராட்சி நூதன தண்டனை விதித்து உள்ளது.
அபராதம்
புனே நகரை சுத்தமாக வைத்திருப்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி சுகாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக சாலையில் எச்சில் துப்புபவர்களை பிடித்து அபராதமும், தண்டனையும் வழங்க முடிவு செய்துள்ளது. சாலையில் துப்புபவர்கள் தங்கள் எச்சிலை உடனடியாக சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல் நகராட்சிக்கு அபராதமும் செலுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து புனே மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை தலைவர் தயானேஸ்வர் மோலக் கூறியதாவது:-
156 பேர் பிடிபட்டனர்
முதல்கட்டமாக கடந்த வாரம் பிப்வேவாடி, அனுத், யரவாடா, காஷ்பா மற்றும் கோலே ரோடு ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 8 நாட்களில் மட்டும் இந்த பகுதிகளில் சாலையில் எச்சில் துப்பிய 156 பேர் மாநகராட்சியினரால் பிடிக்கப்பட்டனர். அவர்கள் துப்பிய எச்சில், அவர்களை கொண்டே சுத்தம் செய்ய வைக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து தலா ரூ.150 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் தங்கள் எச்சிலை தாங்களே சுத்தம் செய்யும்போது அவமானத்திற்குள்ளாவார்கள். அடுத்த முறை அந்த தவறை செய்யும்போது ஒருமுறைக்கு, 2 முறை யோசிப்பார்கள். இதற்காக இந்த நூதன தண்டனை கொடுக்கப்படுகிறது.
முதல் இடத்தை நோக்கி...
2018-ம் ஆண்டு வெளியான சுத்தமான நகரங்கள் பட்டியலில் புனே 10-வது இடத்தை பிடித்திருந்தது. மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூர் முதல் இடத்தை பிடித்தது.
இந்த முறை நாங்கள் முதல் இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story