திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து தர்ணா கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பஸ் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 38). இவர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகள் சங்க திருவண்ணாமலை மாவட்ட தலைவராக உள்ளார். இவர் சில கோரிக்கைகள் சம்பந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு பஸ்சில் புறப்பட்டார். ஆரணியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் நேற்று காலை அவர் ஏறினார்.
பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது ரமேஷ்பாபு, பஸ் கண்டக்டரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையை ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் முனைப்பில் இருந்த கண்டக்டர், ‘‘நீங்களே பயணிகளிடம் கூறுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இது குறித்து இருவருக்கும் இடையே ஏற்படட பிரச்சினை தகராறாக மாறியது.
இந்த நிலையில் பஸ் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் நின்றது. அங்கு பயணிகள் இறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய ரமேஷ்பாபு, திடீரென பஸ்சுக்கு முன் சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகே இச்சம்பவம் நடைபெற்றதால் அருகில் கலெக்டர் அலுவலக பணியில் இருந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து ரமேஷ்பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே பஸ்சில் இருந்த பயணிகள் பலர் நேரம் ஆகிறது, அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்று முறையிட்டனர். இதையடுத்து போலீசார் அந்த பஸ்சை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.