பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது கலெக்டரிடம் கோரிக்கை மனு


பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 4:42 PM GMT)

பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட அவை தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ஜெபசிங், வக்கீல் செண்பகவல்லி, அலெக்ஸ், ஆன்றோ, ரமேஷ், தர்மராஜ், அந்தோணிராஜா உள்பட பலர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட பள்ளங்கள் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட குழி ஆகியவை போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக நாகர்கோவில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளன.

இந்த சாலைகளை தாங்கள் நேரடியாக பார்வையிட்டு சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மாள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

எங்கள் பள்ளி பழமை வாய்ந்த பள்ளி. இங்கு ஏறத்தாழ 3 ஆயிரம் மாணவ–மாணவிகள் பயின்று வருகிறார்கள். எங்கள் பள்ளிக்கு மிக அருகாமையில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று இருந்தது. 3 முறை போராட்டங்கள் நடத்தி, இறுதியாக கோர்ட்டு உத்தரவு படி அந்த கடை மூடப்பட்டது. தற்போது அந்த கடையை மீண்டும் திறப்பதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. அதனால் மாணவர்கள் நலன் மிகவும் பாதிக்கப்படும். அந்த கடையை மீண்டும் திறந்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி எங்கள் பள்ளிக்கு மிக அருகாமையில் அமைக்க முயற்சி செய்யப்படும் மதுக்கடையை அங்கு மீண்டும் திறக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக குமரி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வர பாண்டியன் தலைமையில் சிலர் மனு கொடுத்தனர். அதில், “குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

காணி இன சமுதாயத்தில் உள்ள ஒரு சங்கம் சார்பில் முருகானந்தம் என்பவர் தலைமையில் பலர் மனு கொடுத்தனர். அதில், “திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மாவால் நிலவரி நீக்கம் செய்யப்பட்டு தானமாக நிலம் வழங்கப்பட்டது. அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை திரும்ப காணி இன மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்“ என கூறப்பட்டுள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட முடிவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த  3 பேரின் குடும்பத்துக்கு முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அதனை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். இதேபோல் முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்த விஜின் என்பவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக தமிழ்நாடு மாநில நோயாளர் நலநிதியில் இருந்து ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி கலந்து கொண்டார்.

Next Story