கடலில் மூழ்கிய பல்கலைக்கழக மாணவர் உடல் மீட்பு
கடலில் மூழ்கிய பல்கலைக்கழக மாணவர் உடல் மீட்கப்பட்டது.
விழுப்புரம்,
அசாம் மாநிலம் திப்ருகாட் பகுதியை சேர்ந்தவர் உமா சரண்போரா. இவருடைய மகன் ரீத்துராஜ் போரா (வயது 25). இவர் புதுச்சேரியில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் எம்பி.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 10-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் விழுப்புரம் மாவட்டம் தந்திராயன்குப்பத்தில் உள்ள கடலுக்கு குளிக்கச்சென்றார். அங்கு ரீத்துராஜ்போரா, கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அலையில் சிக்கிக்கொண்டார். உடனே அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ரீத்துராஜ்போராவை, கடல் அலை இழுத்துச்சென்று விட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் தேடினர். மேலும் கடலோர காவல் படையினரும் படகு மூலம் ரீத்துராஜ் போராவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 நாட்களாக தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை மரக்காணத்தை அடுத்த நடுக்குப்பம் கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் ரீத்துராஜ் போராவின் உடல் மிதந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் படகு மூலம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கடற் கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story