ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம்: தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவு


ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம்: தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:15 AM IST (Updated: 12 Nov 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. மழை காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனை கருத்தில்கொண்டு ஆங்கிலேயர்கள் 1937-ல் ஆரணி ஆற்றின் குறுக்கே 450 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர்.

இந்த தரைப்பாலம் வழியாகத்தான் தற்போது ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பேய் மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 மாதங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படன.

இதையடுத்து ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை வாழ் பொதுமக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது.

மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு ஒதுக்கியது. இந்த நிறுவனம் மேம்பாலம் அமைக்கும் பணிகளை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இதன் காரணமாக தற்போது தரைப்பாலத்தின் வழியாக இயங்கிவரும் வாகன போக்குவரத்துக்கு இன்னும் சில நாட்களில் தடைவிதிக்க உள்ளனர். இப்படி தடைவிதித்தால் வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியாக தரைப்பாலத்தின் அருகேயே ஆரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

மேம்பாலம் அமைக்கும் பணி முடியும் வரை ஆற்றில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக ஆற்றின் ஆழமான பகுதியில் ராட்சத குழாய்கள் அமைத்து அதன் மீது தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

இந்த தற்காலிக சாலையானது அருகே உள்ள பெட்ரோல் நிலையம் பின்புறம் திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை மெயின் ரோட்டில் இணைய உள்ளது. இங்கு சுருட்டப்பள்ளியல் உள்ள ஸ்ரீபள்ளி கொண்டேஸ்வரரர் கோவிலுக்கு சொந்தமான காலி நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல கோவில் நிர்வாகம்ஆட்சேபனை தெரிவித்ததாக தெரிகிறது. இதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் மேம்பாலம் அமைய உள்ள பகுதியில் மேம்பாலத்தை தாங்கி நிற்கும் தூண்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story