‘கஜா’ புயலால் காற்றின் வேகம் அதிகரிக்கும்: பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
‘கஜா’ புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் கோழிப்பண்ணைகளில் தீவனம் நனையாமல் இருக்க படுதாவை பக்கவாட்டில் கட்டி தொங்கவிட வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
‘கஜா’ புயல் உருவாகி இருப்பதை தொடர்ந்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிறப்பு வானிலை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
‘கஜா’ புயல் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டு, தமிழகத்தை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளது. இது நாளை (புதன்கிழமை) மாலை முதல் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) மாலை வரையிலான நேரத்தில் தமிழகத்தின் கடற்கரையை கடலூருக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
அப்புயல் நிலப்பரப்பில் கடக்கும் போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி, அதிகபட்சமாக காற்று மணிக்கு 40 கி.மீட்டர் என்ற அளவில் வீசக்கூடும். இந்த புயல் கடக்கும் போது, நாமக்கல் மாவட்டமும் இதன் பாதையில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
எனவே கோழிப்பண்ணையாளர்கள் கோழிகள் மற்றும் தீவனம் நனையாமல் இருக்க பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும். தீவனத்தை பாதுகாப்பான ஈரமற்ற இடத்தில் வைக்க வேண்டும். முன்எச்சரிக்கையாக, தேவையான தீவனத்தை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மேலும் ஆடு மற்றும் மாடு வளர்ப்போர் தங்களின் கால்நடைகளை நாளை மற்றும் நாளைமறுநாள் அவைகளின் இருப்பிடத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story