கல்வராயன்மலையில்: 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீசார் நடவடிக்கை
கல்வராயன்மலையில் பேரல்கள், மண்பானைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் செல்லும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சாராயத்தை காய்ச்சி வாகனங்கள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கரியாலூர் கிள்ளிவளவன், கச்சிராயப்பாளையம் குணசேகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள சேத்தூர், வாரம், உப்பூர் ஆகிய கிராம வனப்பகுதிகளில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்தூர் வனப்பகுதி நீரோடை அருகே சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பிளாஸ்டிக் பேரல்கள், மண்பானைகளில் கடுக்காய், வெல்லம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுடன் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு பேரல்கள், மண்பானைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி, அதேஇடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story