திருச்சியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது முதல் நாளில் 7 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்


திருச்சியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது முதல் நாளில் 7 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 6:51 PM GMT)

திருச்சியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது. 59 பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. முதல் நாளில் 7 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்.

திருச்சி,

திருச்சி 117 பிரதேச ராணுவப்படையில் 57 சிப்பாய்கள், ஒரு கிளார்க், ஒரு சலவை பணியாளர் என 59 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு முகாம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆள்சேர்ப்பு முகாம் தொடங்கியது.

முகாமில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் மதியம் முதல் குவிந்தனர். ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகம், ராணுவ மைதானத்தின் வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவில் தங்கினர். முகாமில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தேர்வு தொடங்கியது.

முதல் நாளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராணுவ மைதானத்தின் முன்பு குவிந்திருந்த இளைஞர்களிடம் ராணுவ அதிகாரிகள் ஒலிப்பெருக்கியில், தமிழக இளைஞர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாநிலத்தினருக்கு நாளை (அதாவது இன்று) நடைபெறும் என தெரிவித்தனர். இதையடுத்து தமிழக இளைஞர்கள் அனைவரும் ஒருபுறம் வரிசையாக நின்றனர். அவர்கள் வரிசையாக மைதானத்திற்குள் வரும் வகையில் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

மைதானத்திற்குள் வரும் போதே 160 செ.மீ. உயரமுடையவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். இதில் உயரம் குறைவானவர்கள் மைதானத்தின் உள்ளேயே செல்ல முடியாமல் பாதியில் திரும்பினர். எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை கல்வித்தகுதி கொண்ட இந்த முகாமில் ஏராளமான பட்டதாரிகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

1,600 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தண்டால் எடுத்தல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வானவர்களின் பெயர், விவரங்களை ராணுவ அதிகாரிகள் சேகரித்து கொண்டனர். அடையாள சான்றிதழ்களையும் சரிபார்த்தனர். நேற்று முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் இளைஞர்கள் குவிந்திருந்தனர். இதில் 3,264 பேர் மட்டும் மைதானத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதிலும் உடற்தகுதி தேர்வில் பலர் தோல்வியடைந்து வெளியேறினர்.

உடற்தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்களை தேர்வு செய்யும் பணியில், கர்னல் எஸ்.ஏ.நவுகான் தலைமையில் சுபேதார் முரளிகிருஷ்ணன் உள்பட ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டனர். முகாமில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ குழுவினரும் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வேன்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் மைதானத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஆள்மாறாட்டம், மோசடிகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் உடற்தகுதி தேர்வை ராணுவ அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். இந்த முகாம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் பகுதி, பகுதியாக மருத்துவ பரிசோதனை நடைபெறும். மருத்துவ பரிசோதனை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, எழுத்துத்தேர்வு ஒரு சில மாதங்களுக்கு பிறகு நடைபெறும் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story