ரூ.2 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக விடப்பட்ட சிறுவன் மீட்பு


ரூ.2 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக விடப்பட்ட சிறுவன் மீட்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 ஆயிரத்திற்கு கொத்தடிமையாக விடப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான்.

கிருஷ்ணகிரி, 

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கடம்பூரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு அருண்குமார் (வயது 10) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சரவணன், கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரத்தை சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ.2 ஆயிரம் கடனாக வாங்கினார். அந்த தொகையை சரவணனால் கொடுக்க முடியவில்லை. இதனால் பாபு கொடுத்த பணத்திற்காக சரவணனின் மகனை வேலைக்கு அனுப்புமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் சரவணன் 5 வயதாக இருந்தபோதே தனது மகனை பாபுவிடம் கொத்தடிமையாக வேலைக்கு அனுப்பினார். இதன் பிறகு சரவணன் அடிக்கடி வந்து தனது மகனை பார்த்து சென்றார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரவணன் இறந்தார். இதனால் அவரது மனைவி வள்ளிக்கு, தனது மகன் அருண்குமாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது குறித்து வள்ளி, தேசிய ஆதிவாசி தோழமை கழகத்திடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் சிறுவன் அருண்குமாரை தேவசமுத்திரத்தை சேர்ந்த பாபு என்பவரிடம் கொத்தடிமையாக விட்டதும், அந்த சிறுவன் கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் கொத்தடிமையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுவன் அருண்குமார், கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள ஏரிக்கரையில் வாத்து மேய்த்து கொண்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கலெக்டர் சரவணன் மற்றும் அலுவலர்கள் நேற்று அங்கு சென்று சிறுவனை மீட்டனர். அவனை 5 ஆண்டுகளாக கொத்தடிமையாக வைத்திருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story