சிவகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் காரில் கடத்தல்; 6 பேர் கைது


சிவகிரி அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் காரில் கடத்தல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 7:11 PM GMT)

சிவகிரி அருகே, காதல் திருமணம் செய்த வாலிபரை காரில் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பெண்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 66). அவருடைய மனைவி மல்லிகா (60). இவர்களுடைய மகன் கார்த்திக் (26). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேனியைச் சேர்ந்தவர் கவிதா (25). இவர் சென்னையில் தங்கி இருந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தார். அப்போது கார்த்திக்கும், கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தார்கள்.

இந்தநிலையில் கார்த்திக்கும், கவிதாவும் கடந்த 9–ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஈரோடு திண்டல் முருகன் கோவிலுக்கு சென்று நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு காதல் திருமண ஜோடி சிவகிரியில் உள்ள கார்த்திக்கின் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று காலை கார்த்திக்கின் வீட்டு வாசலில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து 6 பேர் திபுதிபுவென இறங்கினார்கள். பின்னர் வீட்டுக்குள் சென்று, கார்த்திக்கை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றார்கள்.

காருக்குள் இருந்து கார்த்திக், ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கார் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

இதுகுறித்து உடனே சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் சிவகிரி, கொடுமுடி, அறச்சலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே சிவகிரி அருகே உள்ள நல்லசெல்லிபாளையத்தில் கார்த்திக்கை கடத்திச்சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காருக்குள் கார்த்திக் மற்றும் 6 பேர் இருந்தனர். அனைவரையும் சிவகிரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தெரியவந்த விவரம் வருமாறு:–

கவிதாவின் உறவினர்கள் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த குமரேசன் (32), ரமேஷ் (33), ராஜேஷ் (21), மதன் (24), தினேஷ் (24), சுகந்தி (38), ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த விவேக் (24), செல்வி (60). இந்த நிலையில் சென்னைக்கு படிக்க சென்ற இடத்தில் கவிதா காதலில் விழுந்து கார்த்திக்கை திருமணம் செய்துவிட்டார்.

இதை அறிந்து ஆத்திரப்பட்ட குமரேசன் மற்றும் உறவினர்கள் கார்த்திக்கை கடத்தி கொண்டு வந்துவிட்டால் கவிதா தங்களிடம் வந்துவிடுவார் என்று எண்ணியுள்ளனர். அதன்படி கார்த்திக்கை கடத்துவதற்காக 8 பேரும் காரில் வந்துள்ளனர். திட்டமிட்டப்படி கார்த்திக்கை காரில் கடத்தி ஈரோடு சென்றுள்ளனர். அங்கு செல்வியையும், சுகந்தியையும் வீட்டுக்கு செல்லுங்கள் என்று இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் கொடுமுடிக்கு காரில் சென்றுள்ளனர். அப்போதுதான் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை மீட்டு அவருடைய பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து குமரேசன், ரமேஷ், ராஜேஷ், மதன், தினேஷ், விவேக் ஆகிய 6 பேரையும் கைது செய்தார்கள். செல்வியையும், சுகந்தியையும் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

இந்த சம்பவம் சிவகிரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story