நிலத்துக்கு அடியில் கழிவுநீரை விடும் தோல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் - பொதுமக்கள் புகார்
நிலத்துக்கு அடியில் கழிவுநீரை விடும் தோல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோடு,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:–
கொங்கம்பாளையம் பகுதியில் உள்ள தோல், சாய தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆழ்துளை கிணறுகள் வழியாக நேரடியாக நிலத்திற்கு அடியில் விடப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே புகார் மனு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் தோல் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும், தோல் கழிவுநீர் கலந்த தண்ணீரை எடுத்து விவசாயத்திற்கு பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது. தோல் கழிவில் உள்ள நச்சுத்தன்மை காரணமாக பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம், சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. எனவே தோல் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் கட்சியினர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:–
குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும். அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
பெருந்துறை அருகே உள்ள உலகபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் கொடுத்த மனுவில், ‘‘பாரதியார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்த எனக்கு 12 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. எனக்கு ஓய்வூதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழக ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஈ.வி.கே.சண்முகம் கொடுத்த மனுவில், ‘‘ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’’, என்று கூறி இருந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மொத்தம் 278 மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கதிரவன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஆர்.பி.பிரபாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.