ஈரோடு வெண்டிபாளையத்தில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
ஈரோடு வெண்டிபாளையத்தில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு வெண்டிபாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையில் மது வாங்குபவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு முன்பு நின்று கொண்டு மது அருந்துவதாகவும், இதனால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் டாஸ்மாக் அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் வெண்டிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடைக்கு அருகில் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
வெண்டிபாளையம் கட்டளை கதவணையை பார்வையிட பொதுமக்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் டாஸ்மாக் கடையில் மதுவை வாங்கிவிட்டு ஆங்காங்கே நின்று மது அருந்துகின்றனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுதொடர்பாக பலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திடம் புகார் கொடுத்து உள்ளோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
அதன்பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவருடைய உத்தரவின்பேரில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்றும் வரை நாங்கள் கடையின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. பொதுமக்கள் போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 1 மணிஅளவில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தேவிகாராணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றுமாறு பொதுமக்கள் கூறினர். அதற்கு அதிகாரிகள், விரைவில் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் மாவட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
வெண்டிபாளையத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.