புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஊட்டியில் 25 விஞ்ஞானிகளுக்கு பயிற்சி


புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஊட்டியில் 25 விஞ்ஞானிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 Nov 2018 3:30 AM IST (Updated: 13 Nov 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஊட்டியில் 25 விஞ்ஞானிகளுக்கு பயிற்சி முகாம் தொடங்கி உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் வன அதிகாரிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்களுக்கு களப்பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கப்படுகிறது. அதேபோல், இந்த மையத்தில் நீர்ப்பிரி முகடுப்பகுதி மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் 25 பேர் பயிற்சியில் கலந்துகொண்டு உள்ளனர்.

நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரை 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமுக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. ஆராய்ச்சி மைய தலைவர் கோலா முன்னிலை வகித்தார். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அஞ்சு பகலா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் மண் அரிப்பை தடுத்து நீர் ஆதாரத்தை பெருக்க உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், கிராமப்புற பகுதிகளின் வாழ்வாதாரங்களுக்காகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் புதிய தொழில்நுட்பங்கள் கைகொடுக்கிறது. அதிக மழையால் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது, பேரிடர் இன்னல்களை மேற்கொள்ள உதவுகிறது. நீர் வளங்களை மேம்படுத்துவதில் புதிய உத்திகளை கையாளுவதோடு, பாரம்பரிய முறை குறித்த அறிவுகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மக்கள்தொகை வேகமாக பெருகி இயற்கை வளங்கள் ஒவ்வொன்றாக குறைந்து கொண்டு இருக்கிறது. இந்த வேளையில் இயற்கை வளங்களை பாதுகாக்க இது போன்ற பயிற்சிகள் மிகவும் அவசியம் ஆகும். இதற்காக அனைத்து தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து விஞ்ஞானிகள் பயிற்சி பெற்று முழுமையான அணுகுமுறையில் ஈடுபட வேண்டும். நாடு முழுவதும் நடப்பாண்டில் இதேபோன்று 42 பயிற்சி முகாம்களை நடத்த இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் நிதி உதவிகள் செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் சுப்பிரமணியம், விஞ்ஞானிகள் ராஜா, ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் பயிற்சியின் நோக்கம், மண் மற்றும் நீர்வள பாதுகாப்பிற்கு தொலை உணர்வு, புவி தகவல் அமைப்பு போன்றவற்றின் பயன்பாடுகள், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள், பயிர் உற்பத்தி பெருக்கம், நீர் அறுவடை முறைகள், மண் மற்றும் நீர்வள பாதுகாப்பின் அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள் தடுப்பணை, அணை, விவசாய நிலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு களப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இணை செயலாளர் அஞ்சு பகலா ஆராய்ச்சி மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

Next Story