தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சட்டக்கல்லூரி மாணவர்


தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சட்டக்கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:15 PM GMT (Updated: 12 Nov 2018 7:13 PM GMT)

தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக விடுதி அறையில் சட்டக்கல்லூரி மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

தஞ்சாவூர்,

மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாயன். கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மகன் ஹரீஷ்(வயது 18). இவர் தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.காம். எல்.எல்.பி. என்ற ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தினமும் வகுப்பறைக்கு சென்று வந்தார். விடுதி அறையில் இவருடன் 2 மாணவர்கள் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஹரீஷ் தனது சொந்த ஊருக்கு சென்றார். அங்கு தனது பெற்றோர், உறவினர்களுடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த 2 மாணவர்களும் விடுமுறைக்காக ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால் தனி நபராக ஹரீஷ் மட்டும் அறையில் தங்கியிருந்தார். ஊருக்கு சென்று இருந்த மாணவர்களில் ஒருவர், நேற்று முன்தினம் மாலை பல்கலைக்கழக விடுதிக்கு வந்தார். அப்போது தான் தங்கியிருந்த அறை கதவை திறக்க அவர் முயற்சி செய்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. ஒருவேளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஹரீஷ் தூங்கிக்கொண்டு இருக்கலாம் என கருதி அவரது பெயரை கூறி அழைத்தபடி கதவை மாணவர் தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து கதவு தட்டப்படுவதை பார்த்த சக மாணவர்கள் அங்கு வந்தனர்.

பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கயிற்றினால் தூக்கில் ஹரீஷ் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும், வல்லம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் ஹரீஷ் உயிருடன் இருக்கலாம் என கருதி துப்புரவு தொழிலாளி ஒருவர் உதவியுடன் மாணவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிருடன் இல்லை என்பது தெரிய வந்தது.

தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மதுரையில் இருக்கும் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதற்கு அவர்கள், தாங்கள் வந்த பின்னர்தான் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருக்கும் தனது மகனின் உடலை கீழே இறக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தினர். ஆனால் மாணவர்கள் மத்தியில் ஒருவித பயமும், பதற்றமும் நிலவுவது குறித்து அவர்களிடம் போலீசார் விளக்கி கூறினர்.

இதை ஏற்றுக்கொண்ட அவர்கள், தஞ்சையில் உள்ள தனது உறவினர்களை பல்கலைக்கழகத்திற்கு செல்லும்படி கூறினர். அவர்கள் முன்னிலையில் ஹரீஷ் உடலை போலீசார் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாயன், வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், என் மகன் சாவில் மர்மம் இருக்கிறது. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவையில் உள்ள நெருங்கிய நண்பருடன் ஹரீஷ் அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்தார். அந்த நண்பரிடம் செல்போன் மூலம் விசாரித்தபோது, அதிக செலவு செய்து பல்கலைக்கழகத்தில் என்னை சேர்த்துள்ளனர். மிகவும் கடினமாக இருக்கிறது. 5 ஆண்டுகள் எப்படி படிப்பை முடிக்க போகிறேனோ? என தெரியவில்லை என்று மாணவர் ஹரீஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சட்டப்படிப்பில் சேர்ந்து 5 மாதங்களே ஆன நிலையில் ஹரீஷ் மர்மமான முறையில் இறந்துள்ளதால் ராக்கிங் கொடுமையா? அல்லது காதல் விவகாரமா? என பல்வேறு கோணங்களில் வல்லம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story