சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Nov 2018 10:45 PM GMT (Updated: 12 Nov 2018 7:16 PM GMT)

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

சேலம், 

சேலம் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள கந்தசாமி கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி, முருகேசன். இவர்கள் குடும்பத்தினருடன் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

இதைப்பார்த்த அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கந்தசாமி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 3 பேர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றனர். இது குறித்து அந்த நபர்களிடம் தட்டி கேட்டோம். அதற்கு அவர்கள் 3 பேரும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைக்கேட்ட போலீசார் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு சென்றனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story