பட்டா கேட்டு கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு


பட்டா கேட்டு கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 7:22 PM GMT)

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அரும்பாவூர் கிராம பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் வசிக்கும் பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எங்களுக்கு அரும்பாவூரில் இருந்து பூலாம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தில் இடம் வழங்க வேண்டும் அல்லது அரும்பாவூரில் ஏதேனும் ஒரு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நிர்வாகி பொன்னுச்சாமி தலைமையில், அதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில், கிராமபுற அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், அடையாள அட்டை, நல வாரிய அட்டை அரசு வழங்க வேண்டும். கிராமிய கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பறை இசை, தப்பாட்டம், நாடகக்குழு, கோலாட்டம், சிலம்பாட்டம் போன்றவைகளுக்கு சினிமா கலைஞர்களுக்கு வழங்கும் விருதுகளை போன்று கிராமிய கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும்.

வேப்பூர் ஒன்றியத்தில் கிராமிய கலைஞர்களின் மரபு சார்ந்த கலைகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடவும், அரசின் நல திட்ட உதவிகளை பெறவும், அவர்கள் ஒன்று கூடி அலுவலகம் கட்ட குன்னத்தில் இடம் தந்து உதவ வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மக்கள் நல போராட்டக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வி.களத்தூர் கிராமத்தில் இரு மதத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆலத்தூர் தாலுகா து.களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜா கொடுத்த மனுவில், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், தன்னை கண் டாக்டர் எனக் கூறிக்கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 332 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிக்கும் பண்பினை வளர்த்திடும் பொருட்டு, நடத்தப்பட்ட கட்டுரை, நாடகம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 28 மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டர் சாந்தா ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஆதரவு உதவித்தொகையினையும் வழங்கினார். டெங்கு போன்ற காய்ச்சலை தடுக்க பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் நேற்று முதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story