அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது


அன்னூர் அருகே: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 103 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 103 பேரை போலீசார் கைது செய்தனர்.

அன்னூர், 

அன்னூர் அருகே உள்ள ஆம்போதி வடுகபாளையத்தில் கடந்த 27-ந் தேதி தனியார் விவசாய நிலத்தில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அன்னூர் ஆம்போதி சாதி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பில் தலித் விடுதலை கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராஜ் உள்பட 9 நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்தனர். இதற்கு கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அன்னூர் ஓதிமலை ரோடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனத்தலைவர் பவுத்தன் தலைமையில் தமிழ் சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தலைவர் அகத்தியன், தலித் விடுதலை கட்சி பொதுச்செயலாளர் செங்கோட்டையன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் முத்தரசன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் அன்னூர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் முத்தரசு தலைமையில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 103 பேரை கைது செய்தனர். அவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக கோவை- சத்தி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story