சுல்தான்பேட்டை அருகே: வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 தொழிலாளர்கள் சாவு
சுல்தான்பேட்டை அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பச்சார்பாளையம் ஏ.டி. காலனியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து என்கிற பொன்னுசாமி (வயது 58). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (36). இருவரும் கூலித்தொழிலாளர்கள். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மாலை வேலை முடிந்து சுல்தான்பேட்டையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் பொன்னுசாமி அமர்ந்து இருந்தார். செஞ்சேரி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, பொள்ளாச்சியில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் நாச்சிமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இருவரின் உடல்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சுல்தான்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகம் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story