மானாமதுரை அருகே வரத்து கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்


மானாமதுரை அருகே வரத்து கால்வாயை தூர்வாரிய விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Nov 2018 4:15 AM IST (Updated: 13 Nov 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே கிளங்காட்டூர் மற்றும் 16 கிராம விவசாயிகள் கண்மாய் வரத்து கால்வாயை தாங்களே இணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ளது கிளங்காட்டூர் கிராமம், 800 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. வைகை ஆற்றில் இருந்து கிருங்காக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரியும் நாட்டார் கால்வாய் மூலம் கிளங்காட்டூர் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட நாட்டார் கால்வாயில் இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் இந்த கால்வாயை நம்பி உள்ள 18 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இன்றி பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு மதுரை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கிளங்காட்டூரில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு விவசாயிகளே கால்வாயை தூர்வாரி வருகின்றனர். சமீப காலமாக மழை தண்ணீர் கூட வராததால் கண்மாய் வறண்டு காணப்படுகிறது.

கால்வாய் முழுவதும் கருவேல மரங்களும், நாணல் புதர்களும் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் வர வாய்ப்பின்றி உள்ளது. இதனை தவிர்க்க விவசாயிகளே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, கிளங்காட்டூர் உள்பட சுமார் 16 கண்மாய்களில் கால்நடைகள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை.

இதனால் பலரும் கால்நடைகளை விற்று விட்டனர். வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது நாட்டார் கால்வாயிலும் தண்ணீர் திறக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு சின்னகண்ணூர் கிராமத்திற்கு வந்த அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவரும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர்.


Next Story