முக்கொம்பில் கொள்ளிடம் அணைக்கு செல்ல இயக்குனர் கவுதமனுக்கு போலீசார் தடை


முக்கொம்பில் கொள்ளிடம் அணைக்கு செல்ல இயக்குனர் கவுதமனுக்கு போலீசார் தடை
x
தினத்தந்தி 13 Nov 2018 4:30 AM IST (Updated: 13 Nov 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பில் கொள்ளிடம் அணைக்கு செல்ல இயக்குனர் கவுதமனுக்கு போலீசார் தடைவிதித்தனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம், முக்கொம்பு கொள்ளிடம் பாலத்தில் உள்ள அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் உடைந்தன. இதனால் காவிரி நீர் வீணாக வெளியேறியது. இதையடுத்து 45 நாட்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு, உடைப்பு அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்ப்பதற்கு திரைப்பட இயக்குனர் கவுதமன் வந்தார். இதையொட்டி முக்கொம்பு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்து. முக்கொம்பு நுழைவு பகுதியில் இருந்து உள்ளே சென்ற இயக்குனர் கவுதமனுக்கு, சுற்றுலா மையத்தில் உள்ள பூங்கா பகுதி வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. காவிரி ஆற்றின் பாலத்தின் வழியாக உடைப்பு ஏற்பட்ட கொள்ளிடம் பாலத்திற்கு செல்ல போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. போலீசார் தடைவிதித்ததால் அவர் கொள்ளிடம் அணையை பார்வையிடாமல் திரும்பி சென்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆகஸ்டு மாதத்தில் கேரளா, கர்நாடகம் மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக இயற்கையின் வரப்பிரசாதமாக பெறப்பட்ட 200 டி.எம்.சி. நீரை தேக்க முடியாமல், வீணாக்கிய நாள் தான் அணை உடைந்த நாள். இதற்கு காரணம் தமிழக அரசின் அலட்சிய போக்கு. இந்த அணை உடைந்ததற்கு முக்கிய காரணம் ஆற்று மணல் திருட்டுதான். அடுத்த தலைமுறைக்கு இந்த தண்ணீரும், மணலும் சொந்தமானது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதத்தில் மழை பெய்யும். அப்போது மழை நீரை எங்கு சேமிப்பது. ஏரி, குளங்களை உடனடியாக தூர் வார வேண்டும். ஆட்சியாளர்கள் திரையில் வரக்கூடிய சர்கார் படத்தை விட கோட்டையில் நடைபெறும் சர்க்காரை நன்றாக கவனித்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story