டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 7:56 PM GMT)

டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வீட்டு உரிமையாளருக்கு கலெக்டர் கணேஷ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு உருவாகும் காரணிகள் அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் மட்டை, டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட் களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சியில் தெற்குராஜவீதி, மேலநைனாரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் கணேஷ் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு ராஜ வீதியில் உள்ள தனியார் குடியிருப்பில் டெங்கு கொசுக்கள் உருவாவதற்கான காரணிகள் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் கணேஷ் விதித்தார். தொடர்ந்து கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமக்களை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், தினமும் நகர் முழுவதும் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், வீடுகள் தோறும் சென்று லார்வா புழுக்கள் உள்ளனவா என கண்டறிதல் மற்றும் பொதுமக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகர் பகுதிகளில் உள்ள 62 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களில் டெங்கு கொசு உற்பத்தி காரணிகள் கண்டறியப்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி பணியாளர்கள் வீடு தோறும் சென்று சுவரொட்டிகள் ஒட்டி லார்வா புழுக்கள் கண்டறியப்பட்ட விபரம் குறித்து சுவரொட்டியில் பதிவு செய்வதுடன், தூய்மையாக உள்ள வீட்டின் விபரம் குறித்தும் சுவரொட்டியில் பதிவு செய்கின்றனர். எனவே பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் தங்களது இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாநில தொற்று நோய் தடுப்பு அதிகாரி இந்துமதி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story