மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரேஷன், ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரேஷன், ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 4:15 AM IST (Updated: 13 Nov 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் ரேஷன், ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 243 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன், ஆதார் கார்டு போன்றவற்றை கலெக் டரிடம் ஒப்படைக்க வந்ததால் கலெக் டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் தலைமுறை தலைமுறையாக வீடு கட்டி வசித்து வரும் இடத்திற்கு அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர்.

நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள், எங்களது வீட்டிற்குள் புகுந்து, எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்தும், கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதில் எங்கள் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி, எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, நாங்கள் வசித்து வரும் இடத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

ரேஷன், ஆதார் கார்டை அதிகாரிகள் வாங்க மறுத்ததால் மனு மட்டும் கொடுத்து விட்டு சென்றனர்.

கூட்டத்தில் கீரனூர் கீழ காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 44 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை இதுவரை கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. தற்போது நாங்கள் வசித்து வரும் வீடுகள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் தற்போது அவை சேதமடைந்த நிலையில் உள்ளது. எங்களது பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்யாததால், எங்களால் அரசு மானியம் பெற்று புதிய வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே உடனடியாக எங்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இதேபோல புத்தாம்பூர் ராயவயல் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு வழங்கிய இலவச பட்டா இதுவரை கிராம கணக்கில் பதிவு செய்யவில்லை. எனவே உடனடியாக கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆதனக்கோட்டையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ள பாசன குளம் மற்றும் வரத்துவாரிகளில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. இதனால் குளத்திற்கு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும் சிலர் குளத்தை ஆக்கிரமித்து தைலமரங்களை நடவு செய்து உள்ளனர். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, குளத்தில் உள்ள தைலமரங்கள், கருவேலமரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story