மாவட்டம் முழுவதும் சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி வரும் மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் தேவைப்படும் இடங்களில் சுகாதார வளாகங்களை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் குறிப்பாக கிராமப்புறங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன் சுகாதார வளாகங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது. கிராமசபை கூட்டங்களின் போதும் இதுபற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டு திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் தனிநபர் கழிப்பறைகளை கட்டுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திறந்த வெளிகளை பயன்படுத்துவதை தவிர்க்க கிராமப்புறங்களிலும், நகர் புறங்களிலும் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் நகர் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளே நிதி ஒதுக்கீடு செய்வதுடன் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழும் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் பல்வேறு காரணங்களால் பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. விருதுநகரில் டி.டி.கே.சாலையில் நகராட்சி நூற்றாண்டு விழா நிதியில் கட்டப்பட்ட சுகாதார வளாகமும், சிவன் கோவில் தெருவில் கட்டப்பட்ட சுகாதார வளாகமும் பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இதற்கு தண்ணீர் பற்றாக்குறை, பாதாள சாக்கடையுடன் இணைக்க முடியாமை போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இதேபோன்று பாவாலி கிராமத்திலும் சுகாதார வளாகம் முழுமையான பயன்பாடு இல்லாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட நிலையில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
எனவே தூய்மை இந்தியா திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகம் அடிப்படை தேவையான சுகாதார வளாகங்கள் மூடப்பட்டு இருப்பதை தவிர்த்து அவற்றை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் சுகாதார வளாகங்கள் தேவைப்படும் கிராமங்களில் சுகாதார வளாகங்களை கட்டுவதற்கும் அவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.