தொழிலாளர்களை அதிக அளவில் ஏற்றி சென்றதால் அபராதம்: கேரள அதிகாரிகளை கண்டித்து ஜீப், கார் டிரைவர்கள் போராட்டம்


தொழிலாளர்களை அதிக அளவில் ஏற்றி சென்றதால் அபராதம்: கேரள அதிகாரிகளை கண்டித்து ஜீப், கார் டிரைவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:05 PM GMT)

தோட்ட தொழிலாளர் களை அதிக அளவில் ஏற்றி சென்றதால் அபராதம் விதித்த கேரள அதிகாரிகளை கண்டித்து ஜீப், கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம், 

தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, சக்குப்பள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய் மற்றும் காபி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர்.

இதற்காக தோட்ட நிர்வாகங்கள் சார்பில் ஜீப், கார் உள்ளிட்ட வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தொழிலாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் 12 நபர்கள் மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். வாகனத்துக்குரிய ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வேகத்தில் மட்டுமே வாகனங் களை இயக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் விதிமுறைகளை மீறி அதிகளவு தொழிலாளர்களை ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடும்பன்சோலை இணை ஆர்.டி.ஓ.ஜெயேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் கம்பம்மெட்டு, தூக்குப்பாலம், நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.2 லட்சத்துக்கும் மேலாக அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 10 டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஜீப் டிரைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கேரள அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தோட்ட தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை கம்பம்மெட்டு மலை அடிவாரத்தில் சாலையில் வரிசையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்தும் கம்பம் வடக்கு சப்-இன்ஸ்பெக்டர் திவான் மைதீன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கேரளாவில் அபராதம் விதிப்பதற்கு இங்கு போராட்டம் நடத்துவது சரியல்ல. கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்ட உரிமையாளர்கள் மூலம் கேரள ஆ.ர்.டி.ஓ.விடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறினர். இதையடுத்து டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story