அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இந்து மக்கள் கட்சி மனு


அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்; இந்து மக்கள் கட்சி மனு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:14 PM GMT)

தமிழகத்தில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது இந்து மக்கள் கட்சி–தமிழகத்தின் மாநில தகவல் தொடர்பாளர் ஹரிகரன் மற்றும் கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் கொடி காத்த குமரன் வாழ்ந்த ஊர். தமிழகத்தில் அதிகப்படியான மாணவிகள் பயிலும் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இங்கு தான் செயல்படுகிறது. இந்த பகுதியில் திருப்பூர் மாநகரத்தின் ரெயில் நிலையம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள், நீதிமன்றம் என பல அலுவலகங்கள் இங்கு செயல்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக திருப்பூர் குமரன் சிலை பஸ் நிறுத்தம், ரெயில் நிலையம் செயல்படுகிறது. இந்த சாலை திருப்பூர் குமரனின் தியாகத்தை போற்றும் விதமாக குமரன் சாலை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுகலான சாலை இங்கு திருப்பூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட போது தி.மு.க. சார்பில் குமரன் சிலை பஸ் நிறுத்தம் அருகே பெரியார் மற்றும் அண்ணா சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக நிறுவி தியாகி குமரனின் வரலாற்றை அழிக்க மறைமுகமாக முயற்சி செய்துள்ளனர். மேலும், இந்த சிலைகளை சாலையின் மையப்பகுதியில் நிறுவி போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த சிலைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பட்டம்பாளையம் கோணாபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கொடுத்த மனுவில் ‘‘திருப்பூர் வடக்கு பகுதியான பட்டம்பாளையம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இது குறித்து ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவாக எங்கள் பகுதியில் தெருவிளக்குகளை சீரமைத்து, சரியாக எரிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றிருந்தார். முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபோல் நெருப்பெரிச்சல் ஜே.ஜே.நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘எங்கள் பகுதியில் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் இந்த பணி முடிவடையும் என தெரிகிறது. எனவே எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும்’’ என்றிருந்தார்.

இந்து மக்கள் கட்சி–தமிழகம் மாநில துணைத்தலைவர் பாலாஜி மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘உச்சநீதிமன்றம் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பது தொடர்பாக நேரக்கட்டுப்பாட்டை விதித்தது. இந்த நிலையில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபோல் கடந்த 2006–ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒலி மாசை கட்டுப்படுத்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்துள்ளது.

ஆனால் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசு விற்பனை குறைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். கடந்த காலங்களை போல் எந்த வரையறையும் இன்றி பட்டாசு வெடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.


Next Story