வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவு மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்


வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவு மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 8:17 PM GMT)

வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் கூறினார்.

வாழப்பாடி, 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள குற்றவியல் நடுவர் கோர்ட்டின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று நடந்தது. வாழப்பாடி வட்டார வக்கீல் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் திரவியம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சண்முகநாதன் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், தலைமை குற்றவியல் நீதிபதி சிவஞானம், வாழப்பாடி குற்றவியல் நீதிபதி சந்தோஷம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து முதன்மை நீதிபதி மோகன்ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள், போலீசார் மற்றும் வக்கீல்கள் ஒத்துழைப்பு உள்ளதால் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.

தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கும் கோர்ட்டுக்கு தகுந்த நிலத்தை தேர்வு செய்யவும், அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று நிலையான கட்டிடம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டை இரண்டாக பிரித்து, தனித்தனி கோர்ட்டுகளாக மாற்றி அமைக்க பரிந்துரை செய்யப்படும்.

மாவட்டத்தில் கள்ளக்காதல் உறவு, ஓரினச்சேர்க்கை, அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி குறித்து என எந்த வித மனுக்களோ, வழக்குகளோ கோர்ட்டில் பதிவாகவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story