அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு பெங்களூருவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி அனந்தகுமார் திடீர் மரணம்


அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு பெங்களூருவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி அனந்தகுமார் திடீர் மரணம்
x
தினத்தந்தி 13 Nov 2018 5:30 AM IST (Updated: 13 Nov 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது. அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பெங்களூரு,

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரியாக இருந்தவர் அனந்தகுமார் (வயது 59). கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர் கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மருத்துவமனைகளில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அங்கு அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சொல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனந்தகுமார் கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரு திரும்பினார். பெங்களூருவில் உள்ள சங்கரா புற்றுநோய் அறக்கட்டளை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாச கரு வியை பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

அனந்தகுமாரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், ஆனால் சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்வதாகவும் டாக்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தனர். அதனால் எப்படியும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து அனந்தகுமார் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று குடும்பத்தினர் நம்பி இருந்தனர். நோய் தொற்று ஏற்படும் என்று கூறி அனந்தகுமாரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்த விஷயத்தில் ரகசியம் காக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனந்தகுமார் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்தார். இந்த தகவலை சங்கரா புற்றுநோய் அறக்கட்டளை மருத்துவமனை தலைவர் தெரிவித்தார். மரணமடைந்த அனந்தகுமாருக்கு தேஜஸ்வினி என்ற மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

அதைத்தொடர்ந்து அனந்தகுமாரின் உடல் பெங்களுரு பசவனகுடியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குளிர்பதன வசதி கொண்ட கண்ணாடி பேழைக்குள் அவரது உடல் வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது. அவரது உடல் அருகே அவரது மனைவி, மகள்கள் சோகத்தில் நின்றிருந்தனர்.

அவரது உடலுக்கு கவர்னர் வஜூபாய்வாலா, முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மத்திய மந்திரி சதானந்தகவுடா, தமிழக கால்நடைத் துறை மந்திரி பாலகிருஷ்ணா ரெட்டி, அ.தி.மு.க. மாநில இணை செயலாளர் எஸ்.டி.குமார் மற்றும் மாநில மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கன்னட திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள், உறவினர்கள் ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தியபோது, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, அனந்தகுமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழை மீது படுத்து அழுதார். அதுபோல் பா.ஜனதா நிர்வாகிகள் சிலரும் அனந்தகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அனந்தகுமாரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள், பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனந்தகுமாரின் உடல் நேற்று முழுவதும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அனந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு 8.30 மணியளவில் தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

பின்னர் அவர் கார் மூலம் நேராக பசவனகுடியில் உள்ள அனந்தகுமாரின் வீட்டுக்கு இரவு 9 மணிக்கு வந்தார். அங்கு அனந்தகுமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அனந்தகுமாரின் குடும்பத்தினருக்கு மோடி ஆறுதல் கூறினார். புற்றுநோய் தாக்கியது குறித்தும், அதற்கு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை முறைகள் குறித்தும் விவரங்களை அவர்களிடம் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மோடி இரவு 9.20 மணிக்கு அவர்களிடம் இருந்து விடைபெற்று எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கிருந்து அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மோடி வருகையையொட்டி அனந்தகுமாரின் வீடு அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மோடி வருவதற்கு சிறிது நேரத்்திற்கு முன்பே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டது. மோடி அஞ்சலி செலுத்தியபோது அங்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே நேற்று இரவு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அனந்தகுமாரின் வீட்டுக்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அனந்த குமாரின் உடல் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு பா.ஜனதா நிர்வாகிகள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள். அதன் பிறகு அவரது உடல் நேஷனல் கல்லூரி மைதானத்திற்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்த பிறகு, மதியம் 1 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

அனந்தகுமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கர்நாடக அரசு சார்பில் நேற்று ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விதான சவுதா கட்டிடத்தின் மீதுள்ள தேசிய கொடி, அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. 3 நாட்களுக்கு மாநில அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Next Story