பணிக்கொடை, சேமநல நிதி வழங்கியதில் முறைகேடு? ரூ.8¾ லட்சத்தை திருப்பி அனுப்பிய ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி


பணிக்கொடை, சேமநல நிதி வழங்கியதில் முறைகேடு? ரூ.8¾ லட்சத்தை திருப்பி அனுப்பிய ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி
x
தினத்தந்தி 13 Nov 2018 3:45 AM IST (Updated: 13 Nov 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி தனக்கான பணிக்கொடை, சேமநல நிதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.8¾ லட்சத்தை திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தேனி, 

தேனி ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ஆண்டிப்பட்டி சார்நிலை கருவூலத்தில் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது வங்கிக் கணக்கில் முறைகேடாக வரவு வைக்கப்பட்டதாக தனக்கான பணிக்கொடை, சேமநல நிதி உள்ளிட்ட பயனீட்டுத்தொகை ரூ.8¾ லட்சத்தை திருப்பி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நான் கடந்த 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி ஓய்வு பெற்றேன். எனக்கான ஓய்வூதிய பலன்களில் 2 பலன்கள் கிடைக்கப் பெற்றது. ஆனால், பணிக்கொடை, பொது சேமநல நிதி, அகவிலைப்படி நிலுவைத் தொகை உள்பட பயனீட்டுத்தொகையாக ரூ.8 லட்சத்து 89 ஆயிரத்து 592 வழங்கப்படாமல் இருந்தது. ஏதோ எதிர்பார்ப்பில் எனக் கான தொகையை அளிக்காமல் இழுத்தடித்தனர்.

இந்நிலையில், கடந்த 7-ந் தேதி தனிநபர் வங்கி கணக்கில் இருந்து எனது வங்கிக் கணக்கில் ரூ.8 லட்சத்து 89 ஆயிரத்து 592 செலுத்தப்பட்டது. அது அதிகாரி ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து வந்ததாக தெரியவந்தது. அரசு எனக்கு வழங்க வேண்டிய தொகையை தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து வழங்குவது என்பது முறைகேடானது. தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பெறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால், நான் கடந்த 9-ந்தேதி வங்கிக்கு சென்று அந்த பணம் தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து வந்துள்ளதால், அதை திருப்பி அனுப்புமாறு கடிதம் அளித்தேன். அதன்படி அந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, எனக்கு சேர வேண்டிய தொகையை எனது வங்கிக் கணக்கில் அரசு விதிமுறைகளின் படி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் சீத்தாராமனிடம் கேட்டபோது, ‘தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தப்பட்டது தவறானது தான். இருப்பினும் சம்பந்தப்பட்ட ரவிச்சந்திரன் இன்னும் முறையான புகார் கொடுக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக அவர் புகார் கொடுத்தால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story