கஜா புயலை எதிர்கொள்ள அரசு தயார் - நாராயணசாமி தகவல்
கஜா புயலை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் தயாராக உள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தை ஒட்டிய பகுதியான புதுச்சேரியிலும் இந்த புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் புதுவை அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. அதிகாரிகள் கூட்டம் கூட்டப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
கஜா புயல் காரணமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் புதுவையில் காற்று வீசும் என்றும் கனமழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே நானும், அமைச்சர் ஷாஜகானும் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளோம். அப்போது புதுவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்.
இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை செயலாளர்கள், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, மின்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து அகற்றி சமூக நலக்கூடங்கள், பள்ளிகூடம் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவேண்டும். தீயணைப்புத்துறை, காவல்துறையினர் பாதிக்கப்படுவர்களை உடனடியாக நிவாரண முகாம்களுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் தங்கும் மழைநீரை பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித்துறையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு குடிமைப்பொருள் வழங்கல்துறை உணவு பொட்டலங்களை வழங்கவேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி உள்ளோம். மீதமுள்ள கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நீர் தேக்கங்களில் நீரை தேக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொற்று நோய்கள் ஏற்பாடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. அதையும் மீறி பாதிப்பு ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை குழு உடனடியாக அழைக்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.