தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் - கலெக்டரிடம் உறவினர்கள் கோரிக்கை


தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் - கலெக்டரிடம் உறவினர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2018 9:45 PM GMT (Updated: 12 Nov 2018 9:47 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் உறவினர்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலத்தட்டப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, எஸ்.எஸ். காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

எங்கள் பகுதிகளில் சுமார் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, எஸ்.எஸ்.காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதியினை உமரிக்கோட்டையில் உள்ள கிணற்று பகுதியில் இருந்து பம்பிங் செய்து வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் தண்ணீர் உப்பு தன்மையுடன் இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. அந்த தண்ணீரும் 4 நாட்களுக்கு ஒருமுறை தான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த கிராம பகுதிகளுக்கு, சீவலப்பேரி ஆற்று குடிநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயானது அருகில் உள்ள எஸ்.கைலாசபுரம் வழியாக செல்கிறது. அந்த ஆற்று குடிநீரை இந்த கிராம பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களின் உறவினர்கள் பலர் கொடுத்த மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியை சேர்ந்த மீனவ உறவினர்கள் 8 பேர் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை விடுதலை செய்ய பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்து உள்ளோம். ஆனால் எங்கள் பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் மனவேதனை அடைந்து உள்ளோம். இலங்கை சிறையில் வாடும் எங்கள் பகுதி மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

விளாத்திகுளம் தாலுகா மாதராஜபுரம் ஊர் மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் 35 குடும்பங்கள் உள்ளனர். எங்கள் ஊருக்கு அருகே உள்ள சின்னவன்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்பதற்காக எங்கள் பகுதியில் உள்ள புறம்போக்கு நீர்பிடிப்பு பகுதியை கையகப்படுத்த முயற்சி செய்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் சிலரின் தூண்டுதலின் பேரில் போலீசார் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.

எனவே எங்கள் மீது பொய் வழக்கு போட உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மேட்டுப்பட்டி உமையம்மாள்புரம் முத்தரையர் சமுதாய நிர்வாகிகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நாங்கள் கடல்தொழில் செய்து வருகிறோம். கடற்கரை பகுதியில் ஒருவர் அரசு இடத்தை ஆக்கிரமித்து அதில் டீக்கடை வைத்து உள்ளார். அந்த டீக்கடையில் அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்று வருகிறார். இதனால் அதிகாலையில் கடல் தொழிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார் கள். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

கோரம்பள்ளம் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், கோரம்பள்ளம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளன. கடந்த 6-ந் தேதி பெய்த கன மழை காரணமாக கோரம்பள்ளம் ஊரை சுற்றி கழிவு நீரும், மழை நீரும் தேங்கி காணப்படுகிறது. கோரம்பள்ளம் வடக்கு தெரு, கோவில் தெரு, பி.எஸ்.பி. நகர் 1-வது, 2-வது தெரு உள்ளிட்ட தெருக்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் வெளியேறும் பாதையில் தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் தண்ணீர் தேங்கி விடுகிறது. எனவே மழை நீர் வெளியேற வடிகால் வசதியும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். 

Next Story