குமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலி சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு


குமரி மாவட்டத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலி சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Nov 2018 11:00 PM GMT (Updated: 12 Nov 2018 9:57 PM GMT)

குமரி மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியானார்கள். இதையடுத்து பன்றி காய்ச்சலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

திங்கள்சந்தை,

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை தடுக்க சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பன்றி காய்ச்சலுக்கு பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த விவரம் வருமாறு:-

தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினபாய் (வயது 64). இவர் கடந்த சில நாட்களாக கருங்கல் அருகே இலவு விளையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் ரெத்தினபாய் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கியும் நோய் குணமாகவில்லை. தொடர்ந்து, கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்த போது பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரெத்தினபாய் பரிதாபமாக இறந்தார்.

திங்கள்சந்தை அருகே கண்டன்விளையை சேர்ந்தவர் ஜோசப்பின் கிங் விர்ஜின், டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி எஸ்தர் கிங் (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எஸ்தர் கிங் அந்த பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஆரம்ப கட்டத்தில் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால், காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று எஸ்தர் கிங் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் அஞ்சுகிராமம் சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (68), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சண்முகவேல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் காய்ச்சல் பாதிப்பு அதிகமானதால் சிகிச்சை பலனின்றி சண்முகவேல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பன்றி காய்ச்சலால் பலியான சண்முகவேலின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா? என்று சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். எனவே, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story