பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 48 தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்


பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 48 தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் - கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 10:13 PM GMT)

பசுமை பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 48 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் தூத்துக்குடி வேலைவாய்ப்பு உதவி திட்டத்தின் கீழ், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வேலை இழந்த ஒருவருக்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையையும், ஏரல் தாலுகா கச்சனாவிளையை சேர்ந்த ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

மனிதவள மேம்பாட்டு துறையால், தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும், பள்ளி மாணவ-மாணவிகளிடையே நடந்த ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழையும், மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை படைத்து முதலிடம் பிடித்த தூத்துக்குடி புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, துணை ஆட்சியர்கள் (பயிற்சி) முத்துமாதவன், சத்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story