ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தூத்துக்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 80 குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராம மக்கள் பலரின் வாழ்வாதாரமாக ஸ்டெர்லைட் நிறுவனம் திகழ்ந்தது. கல்வி, மருத்துவம், விவசாயம் போன்ற பல சமுதாய வளர்ச்சி திட்டங்கள் மூலம் எங்கள் கிராமமும், மக்களும் பயனடைந்தனர். சிலர் ஒப்பந்தகாரர்களாக பணியாற்றினர்.
ஆலை மூடப்பட்டதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலைக்கு எதிராக சிலர் மக்களை தூண்டி போராட்டம் நடத்தியதால் ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டு 6 மாதம் ஆன பின்பும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாசுவின் அளவில் மாற்றம் இல்லை என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதேபோல் தாமிரபரணி ஸ்ரீவைகுண்டம் வடகால் மடை எண்.1 விவசாயிகள் அபிவிருத்தி சங்கம் சார்பில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், எங்கள் விவசாயத்துக்கு பிரதான உரமாகிய டி.ஏ.பி. உரத்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உர தொழிற்சாலைகளுக்கு தேவையான சல்பூரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியவை கிடைக்கவில்லை. இதற்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதும் ஒரு காரணம். மேலும் சிவகளை வட்டார பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் சிவகளை, மாங்கொட்டாபுரம், ஆவரங்காடு, பாட்டப்புதூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
Related Tags :
Next Story