இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வேப்பூர் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வேப்பூர் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர்,
வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிப்பதற்காக ராமநாதபுரம் கிராமத்துக்கு சென்றார். அப்போது அந்த வழக்கில் தொடர்புடையவரின் உறவுக்காரரான 27 வயது இளம்பெண்ணிடம் பேசினார். அதில், அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதை ரமேஷ் அறிந்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி அவருடன் அடிக்கடி பேசி ரமேஷ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதை சகித்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண் இது பற்றி தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் மீண்டும் அவர் பேசினால் அவரை வீட்டுக்கு வரவழைக்குமாறு கூறினர். இதை அறியாத ரமேஷ் மீண்டும் அந்த பெண்ணிடம் பேசியபோது, அவரை அந்த இளம்பெண் தன்னுடைய வீட்டுக்கு அழைத்தார்.
இதையடுத்து ரமேஷ் மதுபாட்டில், பிரியாணி பொட்டலத்தோடு இளம்பெண் வீட்டுக்கு சென்றார். அங்கு தனியாக இருந்த அந்த பெண்ணிடம் அவர் நெருங்கியபோது, அங்கு மறைந்திருந்த அவரது உறவினர்கள் ரமேசை மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி, அவருக்கு தர்ம அடி கொடுத் தனர்.
தகவல் அறிந்து அவரை காப்பாற்ற வந்த சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரையையும் அவர்கள் தாக்கி சிறை வைத்தனர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் பேச்சுவார்த்தை நடத்திய தன்பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் துறை ரீதியாக விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் போலீஸ் ஏட்டு ரமேசை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story