தென்காசி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
தென்காசி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
தென்காசி,
தென்காசி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கிராம மக்கள் முற்றுகை
தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 200–க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த சுகாதார நிலையத்தை நேற்று கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் அன்புநிதி, விவசாய சங்க நிர்வாகி நாயகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி சுடலை மணி, நம்பிராஜன் உள்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள் பணிக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை. குறைந்த நேரம் மட்டுமே சிகிச்சை அளிப்பதை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
கூடுதல் மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘தற்போது இந்த பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணிக்கு வரும் நேரத்தை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தனித்தனியே சிகிச்சை பிரிவு உருவாக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு வழங்கப்படும் நிலவேம்பு கசாயம், பன்றிக் காய்ச்சலுக்கு வழங்கப்படும் கபசுர குடிநீர் கசாயத்தையும் கிராமங்கள் தோறும் வழங்கி நோயினை கட்டுப்படுத்த வேண்டும்‘ என்றனர்.
Related Tags :
Next Story