சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நேற்று மாலை நடந்தது. விண்ணதிர்ந்த ‘அரோகரா‘ கோஷத்துடன் லட்சக்கணக்காக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நேற்று மாலை நடந்தது. விண்ணதிர்ந்த ‘அரோகரா‘ கோஷத்துடன் லட்சக்கணக்காக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழா
அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் முருகபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருக பெருமான் சூரபத்மனை வென்று, தேவர்களைக் காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8–ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி–தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமி கடற்கரையில் எழுந்தருளல்
6–ம் திருநாளான நேற்று மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், மதியம் சுவாமி ஜெயந்திநாதர்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தை சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
மாலையில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து, சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, கோவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். தொடர்ந்து மாலை 4.35 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி, சூரபத்மனை வதம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டார்.
சூரசம்ஹாரம்
முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகம் கொண்ட தாரகாசூரன், தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போரிடுவதற்காக, அவரை மூன்று முறை சுற்றி வந்து, சுவாமிக்கு எதிராக நின்றான். மாலை 5.12 மணிக்கு முருகபெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.
அதன்பிறகு கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரன், முருகபெருமானை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்து, நேருக்கு நேர் போரிட தயாரானான். 5.26 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.
தனது சகோதரர்களின் இழப்பால் கோபம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மன் தனது படைவீரர்களுடன் வேகமாக முருகபெருமானுடன் போர்புரிய வந்தான். தொடர்ந்து 5.41 மணிக்கு முருகபெருமான் வேல் எடுத்து சூரபத்மனை சம்ஹாரம் செய்தார். இறுதியாக மாலை 5.55 மணிக்கு மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி முருகபெருமான் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் முருகபெருமான் வைத்து கொண்டார். அப்போது முருகபெருமானுக்கு தீபாராதனை நடந்தது.
சூரசம்ஹாரம் நிகழ்ந்தபோது வானத்தில் 3 கருடன்கள் மூன்று முறை வட்டமிட்டன. அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா‘, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா‘ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
சாயாபிஷேகம்
சூரசம்ஹாரம் முடிந்ததும் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அங்கு சினம் தணிந்த சுவாமிக்கும், வள்ளி–தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் கிரிப்பிரகாரம் வழியாக வலம் வந்து, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார்.
அங்குள்ள கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு அபிஷேகம் (சாயாபிஷேகம்) நடந்தது. பின்னர் விரதம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தகடுகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், காமராஜ், ஐகோர்ட்டு நீதிபதி சுந்தர், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், போலீஸ் ஐ.ஜி. முருகன், நீதிபதிகள் சுரேஷ் விசுவநாதன், சிவாஜி செல்லையா, தினேஷ்குமார், பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், இளங்கோவன், அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன், கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர்கள் பரஞ்ஜோதி, தனபால், அன்புமணி, கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், நெல்லை, தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோவிந்தராசு, மடாதிபதிகள் செங்கோல் ஆதீனம், மயிலாடுதுறை காசிமட ஆதீனம், தொழில் அதிபர்கள் தங்கராஜ் நாடார், ரமணி, ஆனந்த், நாராயணன், அருள்ராஜா, திருநாவுக்கரசு, சீனி பண்ணையார், ராஜா பண்ணையார், ஆத்தூர் ரமேஷ், டாக்டர் அய்யம்பெருமாள், என்ஜினீயர் நாராயணன் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
சூரசம்ஹாரம் நடந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், கோவில் வளாகத்தில் 10 இடங்களில் பெரிய டிஜிட்டல் திரைகள் மற்றும் டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தன.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நகர் முழுவதும் ஆங்காங்கே குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு பானகாரம், குளிர்பானம், அன்னதானம் போன்றவற்றை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சூரசம்ஹாரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், திருச்செந்தூர் புறநகரில் 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 100–க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், 8 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு, மிதவை தடுப்புகள் கடலில் மிதக்க விடப்பட்டு இருந்தன. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் படகில் தயார் நிலையில் இருந்தனர். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன், நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 3 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று, திருக்கல்யாணம்
7–ம் திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு சுவாமி மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார். தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, தெப்பக்குள தெரு சந்திப்பு பகுதியில் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்தலும், தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 11 மணிக்கு கோவில் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் வைதீக முறைப்படி சுவாமி குமரவிடங்க பெருமான்–தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story