நெல்லை பகுதி முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் இன்று திருக்கல்யாணம்
நெல்லை பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லை பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விழா
முருகன் கோவில்களில் சூரனை வதம் செய்து, தெய்வானையை திருமணம் செய்யும் வைபவம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8–ம் தேதி தொடங்கியது.
இதையொட்டி நெல்லை பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு யாகத்துடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் கந்த சஷ்டி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி சப்பரத்தில் எழுந்தருளினார். அவர் டவுன் ரோட்டில் மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே முதலில் கஜமுகம் கொண்ட தாரகாசூரனை எதிர்கொண்டார். அப்போது சுவாமி படைகளுக்கும், சூரனின் படைகளுக்கும் போர் நடப்பது போல் வாள்–கேடயத்துடன் படை வீரர்கள் மோதுவது போல் செயல்பட்டனர். பின்னர் சுவாமியின் வேல் மூலம் சூரனின் தலை துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோரை முருகன் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியாக தாமிரபரணி ஆற்றங்கரையில் சேவல்–மரமாக உருமாறிய சூரபத்மனை, சுவாமி சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி முடிந்த பிறகு பெரும்பாலான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு சுவாமியை வழிபட்டனர்.
சாலைக்குமாரசுவாமி
இதே போல் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தையொட்டி அமைந்திருக்கும் பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. நேற்று மாலை கோவிலில் இருந்து சுவாமி சப்பரத்தில் வேலுடன் புறப்பட்டார். சந்திப்பு ரெயில்வே பீடர் ரோடு, சிந்துபூந்துறை சிவன் கோவில் அருகில், செல்வி அம்மன் கோவில் அருகில் மற்றும் மேகலிங்கபுரம் ஆகிய இடங்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு சுப்பிரமணியர் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்தார். இதேபோல் சண்முகர் சுவாமியும் சன்னதி வழியாக கோவிலுக்கு வெளியே வந்தார். பின்னர் 2 சுவாமிகளும் இணைந்து கீழரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்தனர்.
நெல்லை டவுன் மேலரதவீதியில் போலீஸ் நிலையம் விலக்கு அருகில் முதல் சூரசம்ஹாரமும், கூலக்கடை பஜார் அருகில் 2–வது சூரசம்ஹாரமும், லாலா சத்திரம் முக்கில் 3–வது சூரசம்ஹாரமும், வடக்கு ரதவீதியில் 4–வது சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
இதே போல் பாளையங்கோட்டை மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களிலும் நேற்று சூர சம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
கந்த சஷ்டி விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறுகிறது. நெல்லையப்பர் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இதே போல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இரவு 7 மணிக்கும், சந்திப்பு சாலைக்குமாரசுவாமி கோவிலில் இரவு 11 மணிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நாளை 15–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story