கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மறியல் - 292 பேர் கைது


கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் மறியல் - 292 பேர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:15 PM GMT (Updated: 13 Nov 2018 6:47 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 292 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மாநில தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி தேனி மின்வட்ட கிளை சார்பில், சாலை மறியல் போராட்டம் தேனி என்.ஆர்.டி. சாலையில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு ரூ.4 ஆயிரம் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாநில துணை தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 292 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள், தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story