பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் 145 பேர் கைது


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் 145 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:30 AM IST (Updated: 14 Nov 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நாகையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 145 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் சி.ஐ.டி.யூ. மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு திட்ட தலைவர் சிவராஜன் தலைமை தாங்கினார். நாகை கோட்ட செயலாளர் செபஸ்டியான், மயிலாடுதுறை கோட்ட செயலாளர் தேவகுமார், சீர்காழி கோட்ட செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சீனிமணி, திட்ட பொருளாளர் செந்தில்குமார், திட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு ஒப்பந்தப்படி ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும். பணி செய்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதி ரமேஷ் நன்றி கூறினார். சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 145 பேரை நாகை டவுன் போலீசார் கைது செய்தனர். 

Next Story