புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 7:08 PM GMT)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறை, சீர்காழியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை நகர வட்ட கிளை தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். புறநகர் வட்ட கிளை தலைவர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார். வட்ட கிளை பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் பழனிவேலு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், முன்னாள் கிராம அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார், இணை செயலாளர் அஞ்சம்மாள், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு செயலாளர் ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி ரவீந்திரன் நன்றி கூறினார்.

இதேபோல் சீர்காழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம், வட்ட கிளை செயலாளர் ராமபத்திரன், மாவட்ட இணை செயலாளர் துரைநடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். இதில் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் உள்ளிட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தமிழக முழுவதும் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட கிளை பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராஜன் கலந்து கொண்டு பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் வேதரெத்தினம், மாவட்ட துணை செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி, வட்ட செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story