பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா - 253 பேர் கைது


பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா - 253 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2018 4:15 AM IST (Updated: 14 Nov 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதில் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த மின்வாரிய ஊழியர்கள், மேற்பார்வை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 253 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும்.

ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங் கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று, ஒப்பந்த மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, திண்டுக்கல்- மதுரை சாலையில் மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட தலைவர் திருமலைராஜன் தலைமையில் ஒப்பந்த பணியாளர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

இதையடுத்து அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்.

ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அதன்படி, ஒப்பந்த ஊழியர்கள் 253 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஒரு தனியார் மகாலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை தலைவர் ஜெயசீலன், மாவட்ட செயலாளர் உமாபதி, பொருளாளர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பில், ஒப்பந்த பணியாளர் களுக்கு ஆதரவாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story