பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: தர்ணா போராட்டம் நடத்திய பெண் வக்கீல், தந்தையுடன் கைது


பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சாவு: தர்ணா போராட்டம் நடத்திய பெண் வக்கீல், தந்தையுடன் கைது
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 7:50 PM GMT)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி இறந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய மதுரை பெண் வக்கீல் நந்தினி, தந்தையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி,

மதுரையை சேர்ந்தவர் வக்கீல் நந்தினி. சமூக ஆர்வலரான இவர் பல்வேறு சமூக பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தி வருகிறார். நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தன் ஆகி யோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். சிட்லிங்கில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தாத அரூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு, கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு வந்த போலீசார் முறையான அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வக்கீல் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் தர்மபுரி கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நேற்று தர்மபுரி பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. 

Next Story