அடிப்படை வசதிகள் கோரி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா


அடிப்படை வசதிகள் கோரி அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து தர்ணா
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 8:27 PM GMT)

கறம்பக்குடி அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு முறையாக குடிநீர் வசதி இல்லை. முக்கிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் ஆகியவை வழங்கப்பட வில்லை. இலவச பஸ்பாஸ் வழங்காததால் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் நேற்று காலை வகுப்பை புறக்கணித்து பள்ளி நுழைவு வாசலில் அமர்ந்து அடிப்படை வசதிகள் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமேணிநாதர், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 15 நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின் தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story