கரூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்


கரூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்
x
தினத்தந்தி 14 Nov 2018 4:00 AM IST (Updated: 14 Nov 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

கரூர்,

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கரூர் மேற்குமடவளாகத்தில் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகபெருமான் எழுந்தருளினார். தொடர்ந்து முருகபெருமானுக்கு பல்வேறு வகையான பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சூரபதுமன் என்கிற அசுரன் தன்னை போரில் யாரும் வெல்ல முடியாது என்கிற மனோபாவத்தில் கையில் கேடயம், வாள் உள்ளிட்டவற்றை ஏந்தி எழுந்தருளினார். அப்போது போர்க்களத்தில் மோதிக்கொள்வது போல முருகபெருமான், சூரபதுமனின் பல்லக்குகள் அங்கும் இங்கும் தூக்கி செல்லப்பட்டன. முடிவில் நீதியை நிலைநாட்டி அசுரர்களிடமிருந்து மக்களை காப்பதற்காக தனது வேலால் சூரபதுமனின் தலையை முருகபெருமான் துண்டித்தார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என்கிற கோஷங்களை பக்தர்கள் விண்ணதிர எழுப்பினர்.

மேலும் அசுர சக்தியை பெற்று சிங்க முகத்துடன் காட்சியளித்த சூரபதுமன் தனது உடல் பாகங்கள் எல்லாம் வெட்ட வெட்ட மீண்டும் முளைத்திடும் சக்தியை பெற்றிருந்தார். அப்போதும் முருகபெருமான் தனது வேலால், சூரனின் தலையை துண்டித்து அதில் மாவிலையை வைத்தார். இவ்வாறாக 4 மாட வீதிகளிலும் சூரபதுமனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவிலில் இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண உற்சவம் காலை நடைபெற உள்ளது. இரவில் வள்ளி, தெய்வானை உடன் ஸ்ரீ முருகப்பெருமான் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கரூரில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம், கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல வெண்ணைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முருகபெருமான் பல்லக்கில் போர் களத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூரபதுமன் (அரக்கன்) யானை முகத்தோடு பல்லாக்கில் வந்து போர்புரிந்தார். இதில் முருகபெருமான் தாய் வழங்கிய சக்தி வேலால் யானை முகன் தலையை துண்டிப்பது தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னரும் வேலாயுதம்பாளையம் காந்தி நகர் பகுதியில் சிங்கமுகன் வேடத்தில் 3 முறை வலம் வந்து சூரபத்மன் நின்றான். அப்போது முருக பெருமான் சக்தி வேலால் சூரன் தலையை துண்டித்தார். அப்போது வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்ட மக்கள் அரோகரா கோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story