சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை போலீசார் விசாரணை


சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2018 10:15 PM GMT (Updated: 13 Nov 2018 8:42 PM GMT)

தோரணக்கல்பட்டி அருகே சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி அருகே டி.செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 51). இவர் சொந்தமாக சாயப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சாயப்பட்டறை நடத்த சில கட்டுபாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மதிவாணன் தொடர்ந்து சாயப்பட்டறையை நடத்த முடியாமல் போனது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வசூலுக்கு சென்றுவருவதாகக் கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இந்தநிலையில் மதிவாணனின் தம்பி சிவசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நான் புன்னம்சத்திரம் அருகில் உள்ள வி.ஜி.பி. கார்டனில் விஷ மாத்திரை (செல்பாஸ்) தின்று விட்டேன் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசாமி மற்றும் மதிவாணனின் மகன் ஜீவானந்தம் ஆகியோர் காரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மதிவாணன் அங்கு வாயில் நுரை தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் மதிவாணனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதிவாணன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வேலாயுதபாளையம் போலீசார் மதிவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாயப்பட்டறை உரிமையாளர் விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story